வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Tuesday, January 23, 2007
விலங்கினப் பதிவு
ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :- 1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல். 2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல். 3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன் இன்பத்துக்காகவோ பறித்தல்.என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment