வாழ்க வளமுடன்.
தாயென்றும் தந்தையென்றும் தனிப்பெரும் காப்பாக அமைந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் குருவின் பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.
நமது பிறப்பால் நமக்கு அமைந்திருக்கும் எல்லாமும் நம் பெற்றோர்களால் நம்மை வந்தடைகிறது... இதிலே நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெற்றோரின் அனைத்து பதிவுகளும் நம்மைத் தொடர்கிறது...
ஆனால் குரு என்ற தொடர்பு மட்டும் தான் இந்த பிறப்புச்சுழலில் இருந்து நம்மை திருப்பி இறையிடம் கொண்டு செல்லுகிறது. குருவின் உதவி என்பது நாம் கணக்கிட முடியா ஆழ்ந்த நிலையிலே நம்மைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. சரணடைதல் என்பது தான் இந்த பிறப்பிலே உள்ள பயனை அடைய வழியாக இருக்கிறது...
நாம் நிறைய செயல்கள் செய்வோம்.... நல்லது கெட்டது என்று பிரித்துக்கொண்டே போகலாம். ஆனால் நாம் வெகு இயல்பாகவே சில தவறுகள் செய்வோம்... அது நமக்கு தவறாகத் தெரியாது... ஆனால் இந்த தவறுகள் நிச்சயமாக சூழ்நிலைகளாலும், முன் வினைகளால் நமக்கு வந்து கொண்டிருக்கும்....
இதெல்லாம் ஒரு புறம் இருக்கும்....இருக்கட்டும். இப்போது குருவிடம் சரணடைகிறோம்.... அப்போது, நாம் இது வரை செய்து கொண்டிருந்த செயல்களில் இருந்து நம்மை விலக்கி, இறையின் பக்கம் ஆழமாகச்செல்வோம்... இறை அனுபவம் என்பது கூட சாத்தியப்படும்... அப்படி எனில், வினைப்பயன் என்ன ஆனது என்றால் அது இந்த உடலுக்கு என்று என்னென்ன செய்யவேண்டுமோ அது எல்லாம் செய்து கொண்டே இருக்கலாம், ஆனால் குருவிடம் சரணடைதல் என்ற பந்தமானது, நம்மை அந்த சுழலில் சிக்கா வண்ணம் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கும்....
ஜாதகம் ஏதோ சொல்லும்... ஆனால் குருவின் ஆற்றலானது நம்மை அந்த கிரக நிலைகளில் இருந்தும் நம்மை தாங்கிக்கொள்ளும்... கிரக அமைப்புகள் என்னென்னவோ சொல்லும், ஆனால் அவைகள் அப்படியே இருக்க, சொல்லப்பட்ட கடினமான நிகழ்கள் எல்லாம் வெகு எளிதாக மாற்றி எளிதாக்கப்பட்டு விடும். அது தான் குருவிடம் கொள்ளும் பந்தத்தின் பயன்.
குருவிடம் கொள்ளப்படும் பந்தத்தின் ஆழம் தான், நாம் தியானத்தின் உச்சக்கட்ட பயனைக் கொள்ளும் வாய்ப்பின் அளவு...
நமது பழக்கங்கள் எல்லாம் நமக்கு பெற்றோரினால் வந்து அமைந்து இருக்கும்... மாறாமல் இருக்கும்.Let it be.... ஆனால் குருவிடம் கொண்டுள்ள பந்தம் தரும் பதிவு அந்த பழைய பதிவுகளை எல்லாம் தொடாமலேயே நம்மை தூக்கி இறை நிலையிலே நிறுத்தி பிறவிப்பயனை அடைய உதவும்....
இதைத்தான் நமது கவிதையாக எழுதினார்...
தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு.
இந்த அரும்பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்...
இந்தக்கவியின் மூன்றாவது வரியிலே, அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ.... என்று எழுதி இருக்கிறார் அல்லவா... மற்றோ என்ற ஒரு வார்த்தையிலே எத்தனையோ விதமான வினைகளும் அடக்கம்.
அப்படி இருக்கிற வினைகள் எல்லாம் நம்மால் தீர்த்துக்கொண்டால் தான் நாம் தூய்மை பெற முடியும் என்ற ஒரு எண்ணம் இருப்பின், நாம் இந்த பிறப்பிலே தியானமே செய்ய முடியாது...
குருவின் உதவி என்ற ஆற்றல் என்பது எல்லாவற்றையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது என்பதால், குருவை அண்டி தியானத்திலே ஆழ்ந்து செல்ல வேண்டியது தான் வழி.
மனதின் ஆழம் வரை மட்டும் தான் இந்த பதிவுகள் வேலை செய்ய முடியும்!... மனதை தாண்டி இருக்கிற குருவின் ஆற்றலிடம் இந்த வினைகள் என்ன செய்து விடும்? புலன் உயர்வை கடந்து விரிந்து இருக்கிற குருவிடம் இந்த வினைகள் எல்லாம் புஸ்வானமாகிப்போகும்! குருவிடம் அந்த வினைகளின் தொகுப்பான மனதை விட்டு விட்டு தவத்தை ஆரம்பிப்போம்... வினைகளின் தூய்மை என்பது நாம் செய்யும் நற்செயலினால் வரும் என்பார்கள். தியானத்தை விட நற்செயல் எதுவும் இல்லை.
வினைப்பதிவுகள் எல்லாம் அப்படியே குருவின் காலடியில் விட்டு விட்டு, நிமிர்ந்து குருவின் கையை பிடித்துக்கொண்டு எழுச்சியுடன் செய்வோம் தவத்தை...
குருவே தான் இருப்பு நிலை.... என்று ஆழ்ந்து செல்லவேண்டும். குருவின் ஆற்றலை கண்டால் தாங்க மாட்டோம்... புலன் அறிவிலே நின்று கொண்டு அந்த அபரிமிதமான ஆற்றலிடம் நீர்த்துப் போய் விடவேண்டாம்.
குரு, இருப்பு, நான் என்ற மூன்று நிலைகள் தனித்தனியாக இயங்காமல், குருவின் மூலம் இருப்பை உணர்ந்து நான் என்ற முனைப்பைக் கரைத்து ஆற்றல் வெளியோடு கலந்து விடல் தான் நாம் செய்ய வேண்டியது.
வினைப்பதிவுகள் எல்லாம் குருவிடம் சரணடைந்த சீடனின் பக்கமே செல்லாது ஓடும்.
வாழ்க வளமுடன்.
Sundararajan.R
No comments:
Post a Comment