வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Tuesday, May 29, 2007
குரு சீடர் உறவு--அன்பின் அதிர்வலை!
உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னுள் அடக்கி மறைபொருளாக நிறைந்து கொண்டு வழி நடத்தும் இறையாற்றலோடு இணைந்து இருக்கும் குரு நாதருக்கு என்றென்றும் சரணங்கள்! உலகில் நிகழும் எண்ணற்ற நிகழ்வு, நாம் மனத்தைக்கொண்டு தான் செய்கிறோம்! எந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்று தீர்மானிப்பது இறை நிலை ஒன்றே தான்! அதனால் தான் நம் குரு நாதர் செயல் விளைவு தத்துவத்தை நமக்கு நன்றாக விளக்கினார்கள்! கடை பிடிக்கவும் செய்தார்கள்! நாம் சில நேரங்களில் நிகழ்வதை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலாத தருணம் வரும் போது என்ன செய்வது? நம்மை புண்படுத்துகிற மாதிரி செயல் செய்பவர்கள் எல்லாம் எல்லா வசதிகளை பெற்று வாழ்கிறார்களே! என்றெல்லாம் நமக்கு தோன்றும்! உலகத்தை மாயை என்போம்! அது தரும் வசதி வாய்ப்பு அனைத்தும் கூட மாயை தான்! ஏனெனில் தனக்கு முழுமை தருவதற்காகவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு என்று ஒரு செயலை செய்து வருகிறார்!இதில் நாம் அறிய வேண்டியது என்னவெனில் நாம் எப்படி இருக்க வேண்டியது என்பது மட்டும் தான்! என்ன தான் வாழ்க்கையில் அவரவர் செயல் செய்து வசதிகளை அனுபவித்தாலும் அவர்களும் தனக்கு முழுமை தரும் பாதை இது தான் என்று தானே செயல்களை துணிந்து செய்கிறார்கள்? மற்றவர் செயல்களை பார்த்து நாம் ஏன் கலங்க வேண்டும்? செயலுக்கு விளைவு என்று இறை நிலை அவரவருக்கு செய்ய வேண்டியதை காலத்தோடு செய்யும் போது நாம் ஏன் பிறர் செயல்களை நோக்க வேண்டும்? எல்லாம் வல்ல குருவின் ஆற்றலானது தீயவைகளை தடுத்து நம்மை வழி நடத்துமா? நிச்சயமாக...வழி நடத்தும்! ஏனெனில் Fraction demands Totality supplies!! என்பது தான் நம் குரு நாதர் நமக்கு சொல்வது! எப்போதெல்லாம் நம்மை தாண்டி சில செயல்கள் நமக்கு நிகழ்கிறதோ அப்போதே நாம் அந்த நிகழ்வுகளை களைய முயற்ச்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது! நம் கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களை இயற்கையிடம் தந்து விடுவது நமக்கு நல்லது! புத்தர் பிறந்த போது அவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்கள் கணித்தார்கள் ! முதல் ஜோதிடர்... மூன்று என்று கையை உயர்த்தினார்! இரண்டாம் ஜோதிடர்... இரண்டு என்று கையை உயர்த்தினார்! மூன்றாம் ஜோதிடர் ... ஒன்று என்று கையை உயர்த்தினார்! இதை அறிய ஆவல் கொண்ட மன்னன்... முதல் ஜோதிடரை கேட்டார்... அவர் சொன்னது .... 1. குழந்தை புகழ் பெற்று மக்களை ஆளும் . 2. அதிகாரம் மிகுந்து நாடு முழுவது புகழ் பெற்று ஓங்கும் 3. துறவறம் மேற்கொண்டு மக்களை வழி நடத்தும்! இரண்டாம் ஜோதிடர்.... 1. புகழ் பெற்று நாட்டை ஆளும் 2. துறவறம் மேற்கொள்ளும்.மூன்றாம் ஜோதிடர் சொன்ன ஒரே கருத்து.... 1. நாட்டை விட துறவறம் மேற்கொண்டு நல்ல ஞானம் பெறும் என்பது தான்! இந்த மூன்றாம் ஜோதிடரின் ஆணித்தரமான கருத்து மன்னனை நிலைகுலைய வைத்தது... அவர் மீது கோபம் கொண்ட அரசன் அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தார்! இருப்பினும் முதல் ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்தார்த்தனை வெளி உலகை அறியாத படி வளர்த்தார் மன்னர்! ஒரு கணத்தில் வெளி உலகையும் அதில் நிலவும் செயல்களும் சித்தார்த்தனுக்கு தான் வாழ்ந்த வாழ்வே ஒரு மாயை தான் என்று உணர நாட்டை விட்டு காட்டை நோக்கி தப்பி ஓடினார்! ஞானம் பெற்ற பிறகே அவர் சீடர்களுடன் காவி உடை அணிந்து அவரின் நாட்டில் நுழைந்தாராம்! இந்த நிகழ்வை நாம் அறிவோம்! இதில் நாம் பார்க்க வேண்டியது... சித்தார்த்தன் துறவறம் தான் மேற்கொள்ளுவான் என்று உண்மையை ஆனித்தரமாக சொல்லியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடரின் நிலை தான்! அந்த உண்மையை யாரும் ஏற்க வில்லை! யாரும் நம்பவில்லை! ஆனால் அது தானே நடந்தது? உலகில் ஒரு மகான் தோன்றுகிறார் எனில் அதற்க்கு எண்ணற்ற மக்களின் எண்ண அலைகள் தான் காரணமாக இருக்கிறது!தனி மனித அமைதியின் மூலம் உலகம் அமைதியை அடையும் என்று உண்மையை சொன்ன குரு நாதரின் முயற்ச்சியும் ஆசிர்வாதங்களும் சீடர்களாகிய நமக்கு சூக்கும நிலையிலும் கருமையத்தோடு இணைந்தும் வழி நடத்துகிறார்! குருவின் ஆற்றல் ஆனது நம்மை நிச்சயம் வழி நடத்தும். ஆனால் நாம் அந்த ஆசிகளை பெறும் நிலையில் இருக்க வேண்டும்! அமைதியில் இருந்தால் தான் உணர்வுகளை அறிய முடியும்! நம்மை புண்படுத்தும் அன்பர்கள் இருப்பினும் அவர்களையும் நாம் வாழ்த்தியாக வேண்டும்! அப்போது தான் நாம் குருவின் வழியில் வாழ முடியும்! தவத்துணையால் உயர்ந்தார்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர் தாய் தந்தை குரு தனியே காப்பின்றி இருப்போர்கள் சிவத்தறிஞர் இவர்கட்கு சிறிதோ பெறிதோ துன்பம் சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால் பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி அவ்வேகம் பழி செய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடு செய்யும் அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான்காந்தமும் அரும் நண்பர் அனைத்து பொருள் அவர்வாழ்வில் எதிர்ப்பாகும்! இந்தக்கவியில் குரு நாதர் சொல்வதை பார்க்கும் போது, எவரும், தவம் செய்பவர்களுக்கும் தவத்தில் உயர்ந்த ஞானிகளுக்கும் துன்பமோ மன வருத்தம் ஏற்படாதவாறு வாழ வேண்டும் என்று விவரிக்கிறது! எதிரியையும் நாம் வாழ்த்த வேண்டும் என்று நம் குரு நாதர் சொன்னது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெளிவாகிறது! நாம் மனத்தை இறை நிலையில் செலுத்திக்கொண்ட நம் கடமையை தொடர்வோம்! எந்த தவறு செய்தாலும் எவருக்கும் இறை நிலையானது செயல் விளைவு தத்துவத்தின் படி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் நாம் அனைவரும் குருவின் ஆற்றலோடு அவரின் வழிக்காட்டுதலை நெறியை கொண்டு செம்மையாக வாழ்வோம்! இறை நிலையின் தன்மையான கருணை நிலையில் இருந்து அன்பின் அதிர்வலைகளை அனைத்து உயிர்களுக்கும் செலுத்திக்கொண்டே இருப்போம்! வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment