நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம். பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Friday, December 29, 2006
இயற்கைச் சட்டம் (Law of Nature)
இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம் (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்வோமேயானால், நாம் இரண்டு வகையிலே விழிப்போடு இருந்து பெற வேண்டியதைப் பெறலாம். ஒன்று, இயற்கையின் நியதியை உணர்ந்த மாத்திரத்திலேயே இயற்கையைச் சார்ந்து விடுகிறோம். எல்லா இயக்கங்களும் எல்லா விளைவுகளும் ஒரு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்கின்ற போது, அந்த நியதிக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேராற்றலோடு ஒன்றி நிற்கின்றபோது அந்த நியதியை நன்றாக உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலையும் உண்டாகும். அறிந்து கொள்வது என்பது வேறு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. மூன்றாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெறுவது என்பது. இந்த மூன்று வகையிலே மனிதன் முயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெற முடியும். என்ன பெற முடியாது என்று நினைக்கிறானோ அதை விட்டு விட வேண்டியது தான்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
ஐந்தில் அளவு முறை (Proper usage of five senses)
உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும்போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும். மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால் (1) ஐம்புலன் கருவிகள் கெடும் (2) உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர், "சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்வகை தெரிவான் கட்டேயுலகு" - என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும். விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தியானத்தின் நன்மைகள் (Benefits of Meditation)
விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-
1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.
இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :
1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.
2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. 3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.
4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.
இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :
1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.
2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. 3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.
4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Thursday, December 28, 2006
அலையின் தொடர்பு (Association of waves)
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது. அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
எல்லாம் நன்மையே! (Everything is for the good)
துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக்கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும். நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும்போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
துரியாதீத தவம் - பலன்கள் (Thuriyadeedh Meditation - Benefits)
பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஈகை ஆகிய மூன்று பண்புகள் குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).
2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.
3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.
4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.
5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.
6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.
7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில் லயம் ஆவர்.
8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.
9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.
10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.
11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.
12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.
13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும். மனமே செயல்படும்.
14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.
3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.
4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.
5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.
6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.
7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில் லயம் ஆவர்.
8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.
9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.
10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.
11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.
12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.
13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும். மனமே செயல்படும்.
14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Peace
நமது உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கம் மனித வாழ்வில் அமைதி காண்பதேயாகும். தன்னில் அமைதி, சமுதாய வாழ்வில் அமைதி, உலக அமைதி என மூன்று எல்லைகளைக் குறிப்பாகக் கொண்டு, ஒன்றோடு மற்றது ஒத்தும் உதவியும் நலம் காணும் முறையில் நமது செயல் திட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. நமது நோக்கத்தில் வெற்றி பெற வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைந்து நாம் செயலில் இறங்கும் போது சில பல முன்னேற்றமான செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறான மாற்றங்களைச் செயல்படுத்த முயலும்போது அவற்றின் உட்கருத்துக்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரவர்கள் அறிவு வளர்ச்சி பெற்றுள்ள அளவில், அவர்கள் வாழ்வில் கண்ட அனுபவங்கள் வரையில் எல்லை கட்டிக் கொண்டு, அந்த எல்லைக்குட்பட்டே எல்லாரும், எல்லா நிகழ்ச்சிகளும், செயல்முறைகளும் உருவாக வேண்டும், நடைபெற வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அத்தகையவர்களிடம் கருத்துப் பிணக்குக் கொள்ளாமல் நமது நோக்கங்களை அமைதியாக விளக்கி அவர்களையும் ஒன்றுகூட்டிச் செல்ல வேண்டும். நமது நோக்கம் உலக அமைதி, நமது செயல்முறை தொண்டு, நமது துறை ஆன்மீகம்....அருள் விளக்கம்.... யோகம். இவற்றில் பிறரைக் கட்டுப்படுத்த இடமே இல்லை. ஒவ்வொருவரும் தம்மைத் தாம் தகுதியாகவும், இனிமையாகவும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அருள் தொண்டும், அறவாழ்வும் சிறப்புற அமையச் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றும் விழிப்போடு பழகி இவற்றை இயல்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நிறைவும் இருக்கும்; குறைவும் இருக்கும். அவை யாவும் காண்போர் கருத்தின் ஏற்றத்தாழ்வேயாகும். எனவே, நிறைவை நாடியே செல்வோம். இயற்கையில் அமைந்துள்ள ஆயிரமாயிரம் இன்பங்களை உணர்வோம், அனுபவிப்போம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Wednesday, December 27, 2006
இயற்கையிலேயே தியாகிகள் (Sacrificial - by nature)
நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். ஏன் என்றால், அவர்கள் கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய், தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்து விட்டுத்தான் வருகின்றார்கள். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. அந்த அளவுக்குத் துறந்த பிறகு இங்கே அன்பு நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். சேர்ந்த இடத்திலே இந்த ஒரு பெரிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டியது ஆண் மக்களுடைய கடமையாகும். சாதாரணமாக ஒரு மனைவி என்ற மதிப்பில் மாத்திரம் வேண்டியது அன்று. பெண்மை என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய மதிப்பைப் போல நம் வீட்டுக்கு வந்த பெண்ணிற்குக் கூட அந்த மதிப்பு உண்டு என்று பார்த்து நடந்து கொள்ளலாம் அல்லவா? எல்லாம் சரியாகப் பார்க்கும்போது சாதாரணமாக ஆணுக்கு ஆண் என்ற நட்பிலே ஒரு எல்லை வரையில் தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவிலே இருக்கக்கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதைச் சரியாக உணர்ந்து நடப்பீர்களேயானால் அதைவிட ஒரு பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இயற்கை என்ற சொல்லின் பெருமதிப்பு (Greatness of the word - Nature)
ஆதியெனும் இருப்பு நிலை (சுத்தவெளி)2. இருப்பு நிலையின் தன்னடக்க ஆற்றலால் தானே துண்டுபட்டு நுண்ணிய அளவில் தற்சுழல் அலையாக எழுச்சி பெற்று இயங்கும் பரமாணு.3. பரமாணுவின் சுழற்சி விரைவால் எழும் விரிவலை இருப்பு நிலையான சுத்த வெளியோடு இணைவதால் ஏற்படும் வான்காந்தம்.4. பரமாணுக்களின் கூட்டு இயக்கத்தால் உண்டாகிற காற்று நெருப்பு, நீர், நிலம் ஆகிய நான்கு நிலைகளோடு பரமாணு நிலையும் சேர்க்க விளங்கி நிற்கும் ஐந்து பெளதீகப் பிரிவுகள் (பஞ்ச பூதங்கள்)5. ஓரறிவு உயிரினத் தாவரங்கள் முதல் ஆறறிவுடைய மனிதன் வரையில் உள்ள உயிரினங்கள் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் கூறப்படும் சொல் தான் இயற்கை எனும் பெரு மதிப்புடைய சொல். இயற்கையின் ஆதி நிலையான இருப்பு தனக்குள் அடங்கியுள்ள ஆற்றலால் மலர்ச்சி பெற்று, வெவ்வேறாகக் காட்சியாகும் பரிணாம சரித்திரத்தில் ஒவ்வொரு நிலையையும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குறிப்புகளே எந்த மொழியிலும் அடங்கிய சொற்களாகும். அளவிட முடியாத ஆற்றலுடைய இப்பேரியக்கப் பெருங்களமான இயற்கையைப் பகுத்துப் பகுத்தும் தொகுத்துத் தொகுத்தும் உணரக்கூடிய சிற்றறிவு, பேரறிவு, முற்றறிவு என்ற மூன்று நிலைகளையும் அறிவின் சிறப்பாகப் பெற்றவன் மனிதன். இவ்வளவு சிறப்பையும் இயற்கையாலும், தன் செயலாற்றலாலும், சிந்தனை உயர்வாலும் பெற்ற மனிதன் ஏன் வாழ்வில் துன்பங்களையும், சிக்கல்களையும் அனுபவிக்க வேண்டும்? இந்தச் சிந்தனையின் மூலம் மனித ஆற்றலையும், பிறவியின் நோக்கத்தையும் உணர்ந்து வாழ வேண்டிய இடத்தில், காலத்தில், அளவில் தனது ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டு, பயன்படுத்திச் சிறப்பாக வாழ வழி காண வேண்டும். இதற்குத் தவமும், அறமுமே உதவும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அறிந்தது சிவம்,மலர்ந்தது அன்பு
இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு. அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது? சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன? காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான். எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால், ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, அறத்தை உணர்த்தவல்லது தவமும், அகத்தாய்வும்; அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்று விட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அன்பு - பாசம் (Love and affection)
அறிவு அவ்வப்போது அடையும் பலவித நிலைகளைத் தனித் தனியே குறிப்பிட்டுக் காட்ட நாம் பல சொற்களை உபயோகிக்கிறோம். அவற்றில் அன்பு, பாசம் என்ற சொற்கள் இருவித நிலைகளை குறிக்கின்றன. உருவ அளவிலே - பொருள் அளவிலே - ஞாபகம் குறுகி ஒரு பொருள் தனக்குச் சொந்தம் என்று கருதும் கற்பனை மீது எழும் பற்றுதல் நிலையைப் பாசம் என்று சொல்லுகிறோம். ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே - உயிர் நிலையை அறிந்த உயர்விலே - பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே - ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே - கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழிகாண வேண்டும் என்ற கனிவிலே - ஏற்படும் பற்றுதலை அன்பு என்று சொல்லுகிறோம். சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்னும் போது அது அன்பு நிலையாகும். என் மனைவியை - என் குழந்தைகளைப் பாதுகாக்க முயற்சிப்பேன் என்னும் போது அது பாசம் என்னும் நிலையாகும். மனிதர்களுக்கு நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது அன்பின் செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது பாசம் என்று சொல்லப்படும். ஆகவே, ஒரு எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே பாசம் எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும், அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே அன்பு எனப்படும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நடிப்புச் சினம் (Feigned Anger)
"எந்தச் சந்தர்ப்பத்திலும் சினம் நன்மை விளைவிக்காது என்றால் அடம் பிடிக்கும் குழந்தையையும், நல்லவர்களையும் ஏமாற்றும் கபட மனம் படைத்த வேலையாளையும் எப்படித் திருத்துவது? கோபத்தைக் காட்டினால் தானே அவர்கள் ஒழுங்குக்கு வருகிறார்கள்?", என்ற கேள்விகள் எழலாம். சினத்தைப் பயன்படுத்தாவிட்டால் நற்பயன் விளையவே விளையாது என்று காணும் இடத்தில் சினம் தேவைதான். ஆனால், இந்தச் சினமானது யார்மீது செலுத்தப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் அது சினமாகத் தோன்ற வேண்டும். மற்றபடி அது நமக்குச் சினமாகவே இருக்கக் கூடாது. சினம் உதட்டில் இருக்கலாம், உள்ளத்தில் இருக்கக் கூடாது. சினம் வந்தது போல் வேண்டிய அளவு, நடிக்கலாம். ஆவேசத்தை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது போலியாக இருக்க வேண்டும். மனம் மட்டும் நீர்த்தளம் போல் சமமாகச் சலனமற்று இருக்கட்டும். அது எப்படிச் சாத்தியம் என்றால் சினிமாவில் பார்க்கிறோமே, வில்லனுக்குக் கதாநாயகன் மேல் என்ன கோபம் வருகிறது? அது உண்மையான கோபமா? உண்மையானது என்றால், கதாநாயகன் அல்லவா இறந்து போவான்? நம்மால் நடிக்க இயலாமல் இருக்கலாம். ஆனால், உண்மைச் சினத்தின் அபாயத்திலிருந்து தப்ப, நடிக்கக் கற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இறைநீதி (The Divine Law)
இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இல்லற மலர்ச்சி (Blossoming of the family)
உண்மையான நிலை என்னவென்றால், நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்து கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால், நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத் தான் அதிகமான அளவு செயல்பட முடியும். விளைவு வர முடியும். அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும், இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அவர்கள் மூலமாகத் தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும். ஆகவே, இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான், என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே, இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர், உண்மையான தெய்வநிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தற்சோதனை (Introspection)
எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுக்குள் மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கும். புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும் போது விளைவறியாமல் எண்ணுதலும், பேசுதலும், செயல் புரிதலும் இயல்பு. இவை பழக்கத்தால் திரும்பத் திரும்ப எழுச்சி பெற்று இயங்கும். காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பத் தவறான எண்ணம், பேச்சு, செயல் இவற்றால் பல தீமைகள் எழுகின்றன, துன்பங்கள் விளைகின்றன. தன்னிடமிருந்து அவ்வப்போது எழும் எண்ணம், சொல், செயல் இவற்றை ஆராய்ந்து தவறானவற்றை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு தவறுகளைத் திருத்தி நலம் தரும் முறையில் எண்ணம், சொல், செயல்களை ஒழுங்கு படுத்த வேண்டும். இதற்கான உளப்பயிற்சியே தற்சோதனையாகும். முதலில் எண்ணங்களைத் திருத்தி அமைக்க ஒரு வாரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். காலை, மாலை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து உங்களிலிருந்து எழும் எண்ணங்களின் தன்மைகளை ஆராயுங்கள். தவறானவற்றை- துன்பம் விளைக்கும் எண்ணங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். "இந்த எண்ணம் எனக்கு இந்த வகையில் துன்பம் அளிக்கும். ஆகவே இது தவறு. இதற்கு நான் இடங்கொடுக்க மாட்டேன்" என்று பல தடவை அந்த எண்ணத்தோடு இணைப்பு எண்ணத்தைச் சேர்த்துவிடுங்கள். இதுபோன்றே அடுத்தவாரம் சொற்களைப் பற்றி ஆராயுங்கள். உங்களின் எந்தச் சொற்களால் உங்களுக்கோ, பிறருக்கோ வருத்தம் உண்டாகுமோ அவற்றைக் குறித்துக் கொண்டு மீண்டும் அத்தகைய சொற்களை பயன்படுத்தாதிருக்க மன உறுதி செய்து கொள்ளுங்கள். பிறரோடு பேசும்போது அத்தகைய சொற்கள் எழாமல் விழிப்போடு காத்து பழகுங்கள். மூன்றாவது வாரம் செயல்களை பற்றி ஆராயுங்கள். தவறான செயல்களைக் குறித்துக் கொண்டு அச்செயலை மீண்டும் அந்த முறையில் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். நாள்தோறும் அத்தகைய செயல்களுக்குத் தொடர்பான நபரோ, தேவையோ, சூழ்நிலையோ வரும்போது மிகவும் விழிப்பாக இருங்கள். தவறு புரியாதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு உங்களை நீங்களே தற்சோதனை என்ற புடத்திலிட்டு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் அழுக்குகளை நீக்கிக் கொள்ளுங்கள். இந்த மூன்று வாரத்திய தற்சோதனைப் பயிற்சி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு விழிப்போடு இருக்கும் பழக்கத்தை அளிக்கும். வாழ்வதைத் தூய்மை ஆக்கும். வெற்றியளிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் ஓங்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
எண்ணம்
எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும். எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது? பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Tuesday, December 26, 2006
முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் (Birth Cycle)
பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்து விட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும். அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுகள் வரை திரும்பத் திரும்பப் பிரதிலிக்கும் வேகம் உண்டு. அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும். இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைகளுக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே, ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலைமுறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப் பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அறுகுணச் சீரமைப்பு
அறுகுணம் என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறுவகை மனோ நிலைகள். இவை தமிழ் மொழியில் முறையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளக்கப்படுகின்றன. இவை எல்லா உயிர்களிடத்தும் அமைந்துள்ளன. மனிதனிடம் இந்த மனோ நிலைகள் எழுச்சி பெறும் போது தீய செயல்களைச் செய்து விடுவான். அதனால் பொருள் அழிவும், மகிழ்ச்சி இழப்பும் விளையும்.
தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால் இந்த ஆறு மனோ நிலைகளில் பேராசையை - நிறை மனமாகவும்; சினத்தைப் - பொறுமையுடமையாகவும்; கடும் பற்றை - ஈகையாகவும்; முறையற்ற பால் வேட்பைக் கற்பாகவும்; உயர்வு - தாழ்வு மனப்பானமையை - நேர் நிறையுணர்வாகவும்; வஞ்சத்தை - மன்னிப்பாகவும் சீரமைத்துக் கொள்ளலாம். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம். தேவையும், பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே "அறிவு" எனப்படும். உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை "மயக்கம்" அல்லது "மாயை" என்று கூறுகிறோம். அறிவு நிலை குலைந்த மயக்கத்தில் தான் தீய செயல்கள் விளைகின்றன.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால் இந்த ஆறு மனோ நிலைகளில் பேராசையை - நிறை மனமாகவும்; சினத்தைப் - பொறுமையுடமையாகவும்; கடும் பற்றை - ஈகையாகவும்; முறையற்ற பால் வேட்பைக் கற்பாகவும்; உயர்வு - தாழ்வு மனப்பானமையை - நேர் நிறையுணர்வாகவும்; வஞ்சத்தை - மன்னிப்பாகவும் சீரமைத்துக் கொள்ளலாம். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம். தேவையும், பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே "அறிவு" எனப்படும். உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை "மயக்கம்" அல்லது "மாயை" என்று கூறுகிறோம். அறிவு நிலை குலைந்த மயக்கத்தில் தான் தீய செயல்கள் விளைகின்றன.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Friday, December 22, 2006
Subscribe to:
Posts (Atom)