எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுக்குள் மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கும். புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும் போது விளைவறியாமல் எண்ணுதலும், பேசுதலும், செயல் புரிதலும் இயல்பு. இவை பழக்கத்தால் திரும்பத் திரும்ப எழுச்சி பெற்று இயங்கும். காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பத் தவறான எண்ணம், பேச்சு, செயல் இவற்றால் பல தீமைகள் எழுகின்றன, துன்பங்கள் விளைகின்றன. தன்னிடமிருந்து அவ்வப்போது எழும் எண்ணம், சொல், செயல் இவற்றை ஆராய்ந்து தவறானவற்றை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு தவறுகளைத் திருத்தி நலம் தரும் முறையில் எண்ணம், சொல், செயல்களை ஒழுங்கு படுத்த வேண்டும். இதற்கான உளப்பயிற்சியே தற்சோதனையாகும். முதலில் எண்ணங்களைத் திருத்தி அமைக்க ஒரு வாரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். காலை, மாலை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து உங்களிலிருந்து எழும் எண்ணங்களின் தன்மைகளை ஆராயுங்கள். தவறானவற்றை- துன்பம் விளைக்கும் எண்ணங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். "இந்த எண்ணம் எனக்கு இந்த வகையில் துன்பம் அளிக்கும். ஆகவே இது தவறு. இதற்கு நான் இடங்கொடுக்க மாட்டேன்" என்று பல தடவை அந்த எண்ணத்தோடு இணைப்பு எண்ணத்தைச் சேர்த்துவிடுங்கள். இதுபோன்றே அடுத்தவாரம் சொற்களைப் பற்றி ஆராயுங்கள். உங்களின் எந்தச் சொற்களால் உங்களுக்கோ, பிறருக்கோ வருத்தம் உண்டாகுமோ அவற்றைக் குறித்துக் கொண்டு மீண்டும் அத்தகைய சொற்களை பயன்படுத்தாதிருக்க மன உறுதி செய்து கொள்ளுங்கள். பிறரோடு பேசும்போது அத்தகைய சொற்கள் எழாமல் விழிப்போடு காத்து பழகுங்கள். மூன்றாவது வாரம் செயல்களை பற்றி ஆராயுங்கள். தவறான செயல்களைக் குறித்துக் கொண்டு அச்செயலை மீண்டும் அந்த முறையில் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். நாள்தோறும் அத்தகைய செயல்களுக்குத் தொடர்பான நபரோ, தேவையோ, சூழ்நிலையோ வரும்போது மிகவும் விழிப்பாக இருங்கள். தவறு புரியாதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு உங்களை நீங்களே தற்சோதனை என்ற புடத்திலிட்டு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் அழுக்குகளை நீக்கிக் கொள்ளுங்கள். இந்த மூன்று வாரத்திய தற்சோதனைப் பயிற்சி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு விழிப்போடு இருக்கும் பழக்கத்தை அளிக்கும். வாழ்வதைத் தூய்மை ஆக்கும். வெற்றியளிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் ஓங்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment