வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, December 28, 2006

எல்லாம் நன்மையே! (Everything is for the good)

துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக்கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும். நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும்போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments: