வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, December 26, 2006

அறுகுணச் சீரமைப்பு

அறுகுணம் என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறுவகை மனோ நிலைகள். இவை தமிழ் மொழியில் முறையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளக்கப்படுகின்றன. இவை எல்லா உயிர்களிடத்தும் அமைந்துள்ளன. மனிதனிடம் இந்த மனோ நிலைகள் எழுச்சி பெறும் போது தீய செயல்களைச் செய்து விடுவான். அதனால் பொருள் அழிவும், மகிழ்ச்சி இழப்பும் விளையும்.
தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால் இந்த ஆறு மனோ நிலைகளில் பேராசையை - நிறை மனமாகவும்; சினத்தைப் - பொறுமையுடமையாகவும்; கடும் பற்றை - ஈகையாகவும்; முறையற்ற பால் வேட்பைக் கற்பாகவும்; உயர்வு - தாழ்வு மனப்பானமையை - நேர் நிறையுணர்வாகவும்; வஞ்சத்தை - மன்னிப்பாகவும் சீரமைத்துக் கொள்ளலாம். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம். தேவையும், பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே "அறிவு" எனப்படும். உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை "மயக்கம்" அல்லது "மாயை" என்று கூறுகிறோம். அறிவு நிலை குலைந்த மயக்கத்தில் தான் தீய செயல்கள் விளைகின்றன.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments: