நமது உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கம் மனித வாழ்வில் அமைதி காண்பதேயாகும். தன்னில் அமைதி, சமுதாய வாழ்வில் அமைதி, உலக அமைதி என மூன்று எல்லைகளைக் குறிப்பாகக் கொண்டு, ஒன்றோடு மற்றது ஒத்தும் உதவியும் நலம் காணும் முறையில் நமது செயல் திட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. நமது நோக்கத்தில் வெற்றி பெற வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைந்து நாம் செயலில் இறங்கும் போது சில பல முன்னேற்றமான செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறான மாற்றங்களைச் செயல்படுத்த முயலும்போது அவற்றின் உட்கருத்துக்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரவர்கள் அறிவு வளர்ச்சி பெற்றுள்ள அளவில், அவர்கள் வாழ்வில் கண்ட அனுபவங்கள் வரையில் எல்லை கட்டிக் கொண்டு, அந்த எல்லைக்குட்பட்டே எல்லாரும், எல்லா நிகழ்ச்சிகளும், செயல்முறைகளும் உருவாக வேண்டும், நடைபெற வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அத்தகையவர்களிடம் கருத்துப் பிணக்குக் கொள்ளாமல் நமது நோக்கங்களை அமைதியாக விளக்கி அவர்களையும் ஒன்றுகூட்டிச் செல்ல வேண்டும். நமது நோக்கம் உலக அமைதி, நமது செயல்முறை தொண்டு, நமது துறை ஆன்மீகம்....அருள் விளக்கம்.... யோகம். இவற்றில் பிறரைக் கட்டுப்படுத்த இடமே இல்லை. ஒவ்வொருவரும் தம்மைத் தாம் தகுதியாகவும், இனிமையாகவும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அருள் தொண்டும், அறவாழ்வும் சிறப்புற அமையச் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றும் விழிப்போடு பழகி இவற்றை இயல்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நிறைவும் இருக்கும்; குறைவும் இருக்கும். அவை யாவும் காண்போர் கருத்தின் ஏற்றத்தாழ்வேயாகும். எனவே, நிறைவை நாடியே செல்வோம். இயற்கையில் அமைந்துள்ள ஆயிரமாயிரம் இன்பங்களை உணர்வோம், அனுபவிப்போம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment