வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, December 20, 2006

ஞானக் களஞ்சியம்

தண்டனையில் நீதி வேண்டும்
----------------------------------------
கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து
கொலையுண்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்
கொலைக்குக் கொலை நீதியென்றும் குற்றம்
செய்த கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
கொலையுண்டோர் மனைவிமக்கள் பெற்றோர் செய்த
குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
கொலையுண்ட நிகழ்சி அன்னார் வாழ்வில் என்றும்
கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே?

குற்றங்கள் ஒழிய வழி
-----------------------------

சமுதாய அமைப்பினிலே உள்ள குறைபாடே
தனிமனிதன் குற்றங்கள் அனைத்திற்கும் மூலம்
சமுதாயம் தனியாரைத் தண்டித்து மேலும்
தவறிழைக்கும் செய்கையினை நீதியெனில் நன்றோ?
சமுதாய அமைப்புமுறை சீர்திருந்தி பொருட்கள்
சமத்துவமாய் அனைவருக்கும் கிட்டுமெனில் உலக
சமுதாயத்தில் குற்றம் நிகழ இடமேது?
தண்டனைக்கு எனவகுத்த சட்டங்கள் ஏனோ?

அருள் தொண்டு
--------------------

குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்து செயலாற்றி உய்வோம்:
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்.
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மா நிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments: