வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, December 21, 2006

குருவிடம் சரணடைவோம்

நமக்கு இன்ப துன்பம் எல்லாம், உடல் வரைக்கும் தான்! இந்த உடல் அழியக்கூடியது என்பதை மறக்கும் கணத்தில், தன்முனைப்பு எழுகிறது! குருவானவர் எல்லாம் உணர்ந்தவர் என்றால் அவரை அவராலேயே காப்பாற்றிக்கொள்ள முடியாதா? மரணத்தை தள்ளிப்போட முடியாதா? என்று ஒருவர் என்னிடம் கேட்டார்! இந்த கேள்வி உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனதால் தான் கேட்க முடியும்! குருவானவர் என்ன தான் பேசினாலும், மனதை அந்த அமைதியான பேரருளின் மீது என்றும் வைத்திருப்பவர்! இறை நிலையின் நிறைவில் என்றும் இருக்கும் குருவானவர் தான் இயற்கையில் தன் வாழ்வில் நிகழும் எதையும் ஏற்கும் தன்மையுடன் இருக்கிறார்! பிறந்து விட்ட உடலுக்கு இறப்பு நிச்சயம் ஆகிறது!மனிதனாக பிறந்து நிறைவை , பிறவிப்பயனை அனுபவத்த பிறகு இந்த உடல் தேவையில்லாத பாரமாகிப்போகும்!எப்போது உன்னுடன் நிம்மதியாக இருப்பது என்று இறைவனை நோக்கி பேச ஆரம்பித்து விடுவோம்!ரமணர் தன் இறுதி நாளில், சீடர்கள் புற்று நோயின் தீவிரத்தைப் பார்த்து அழுதார்களாம்! அவரோ எப்போதும் போல், கடுமையான வலியிலும் சிரித்துக்கொண்டே இருந்தாராம்! சீடர்களிடம்............ நீங்கள் இந்த உடலுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்! என்னைப் பொறுத்தவரை மிக நிறைவாக இருக்கிறேன்! இவ்வுடல் என்பது நாம் பயணம் செய்யும் ரயில் வண்டியைப்போல... இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் ரயிலை விட்டு போய்விடுகிறோம் அல்லவா! அது போலத்தான்... ஆன்மாவின் நிலை என்பது பேரறிவாகிய இறைவன் என்று உணரும் போது, அந்த இறைவனுடன் கலந்து விட கணத்திற்கு கணம் நாம் துடிப்போம்! ரயிலில் ஏறியவுடன் நம் மூட்டைகளை நம் தலை மேலேயே வைக்காமல் இறக்கி வைப்பது போல, இறைவனின் மேல், நாம் நம் பாரத்தை இறக்கி வைத்து விட்டு சுகம் காண்பது தான் சமாதி நிலை! நம் குரு நாதர் 30 ஆண்டுக்கு முன்பே, அருள் நிறைந்த பெருஞ்சோதி எனை அரவணைத்துக்கொள்ளும் அந்தப் பெருநந்நாளை எதிர்பார்த்து உள்ளேன்! என்று கவிதையில் எழுதினார்! இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, இயற்கையாக தங்களுக்கு வரும் மரணத்தை மகான்கள் ஏற்றார்கள்!எதிர்ப்பே இல்லை! இயேசு, ராகவேந்திரர், வள்ளலார், ரமணர், குருநாதர் என்று எல்லாரும் தங்களுக்கு மரணம் நேர்வதை தடுக்கவே இல்லை! ஏனெனில், அது தான் இயற்கை, இறைவன் தரும் கருணையாக ஏற்றுக்கொண்டார்கள்! உடலுக்கு என்னதான் ஆனாலும், அதுவும் கூட இறைவன் தரும் பரிசாக ஏற்றார்கள்! திருவாசகத்தில், ஒரு அதிகாரம் முழுதும் கூட, தன் உயிரை ஏற்குமாறு ஈசனை உணர்ந்தோர்கள் உருகுவார்கள் என்று இருக்கிறது! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்! ஒரு குறையும் இல்லை! எதுவும் ஈசன் அருளே! இந்த உடலுக்கு, மனதிற்கு நிகழும் எதுவும் இறைவனின் கருணையே! அவனிடமிருந்து பிரிய வேண்டிய அவசியமே இல்லை! இவ்வுடலுக்கு என்ன தான் ஆனாலும், அவனை விட்டு பிரியாத நிலை போதும்! அந்த நிலை அடைய குருவிடம் சரணடைவோம்!வாழ்க வளமுடன்!

No comments: